சென்னையில் இன்று தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

Update: 2023-06-02 21:59 GMT

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. ஏற்பாடு செய்துள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கு, தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு அனைவரையும் வரவேற்கிறார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். மேலும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இதையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கூட்டணி கட்சி தலைவர்கள்

* கூட்டத்தில் கலந்துகொள்ளும் கூட்டணி கட்சி தலைவர்கள், தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பின்னி மில் மெட்ராஸ் பங்களாவில் நுழைவு வாயில் 1-ல் வாகனத்தை நிறுத்திவிட்டு, மேடைக்கு பின்பு உள்ள நுழைவு வாயில் வழியாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

* தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் 2-வது நுழைவு வாயில் வழியாக வரவும். வாகனத்தை 10-வது நுழைவு வாயிலில் உள்ள இடத்தில் விடவும்.

* திரு.வி.க.நகர், எழும்பூர் தொகுதியை சேர்ந்த தொண்டர்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள வாகன நிறுத்தும் இடம் 12-ல் வாகனத்தை நிறுத்திவிட்டு 3-வது நுழைவு வாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

எந்த தொகுதிக்கு எந்த வழி?

* துறைமுகம், ராயபுரம் தொகுதிகளை சேர்ந்தவர்கள் பாரதி கலை கல்லூரி வழியாக பேசின்பிரிட்ஜ் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆட்டு இறைச்சி கூடம் எதிரில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் 12-வது நுழைவு வாயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு 4-வது நுழைவு வாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

* திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதியை சேர்ந்த தொண்டர்கள் சத்திய மூர்த்தி நகர் சாலை வழியாக மூர்த்திங்கர் சாலை, கணேசபுரம் சுரங்கப் பாதை வழியாக ஆட்டு இறைச்சி கூடம் எதிரில் உள்ள வாகன நிறுத்தும் இடம் 12-ல் வாகனத்தை நிறுத்திவிட்டு 4-வது நுழைவு வாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

* திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் அம்பத்தூர் ஓ.டி., பாடி மேம்பாலம் குன்னூர் நெடுஞ்சாலை, குக்ஸ் ரோடு, ஸ்டீபன்சன் ரோடு வழியாக வாகன நிறுத்தும் இடம் 8-ல் வாகனத்தை நிறுத்திவிட்டு 5-வது நுழைவு வாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

காஞ்சீபுரம், சென்னை மாவட்டம்

* காஞ்சீபுரம் மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம், சென்னை தென்மேற்கு மாவட்டம், சென்னை தெற்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்கள் கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.என்.டி. சாலை, அண்ணா சாலை, சிம்சன் சாலை, ஈ.வெ.ரா. சாலை, ரித்தர்டன் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக பின்னி மில் வாகனம் நிறுத்தும் இடத்துக்கு 8-வது நுழைவு வாயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு 6-வது நுழைவு வாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

* கொளத்தூர், மாதவரம் தொகுதியை சேர்ந்த தொண்டர்கள் மூலக்கடை - மாதவரம் நெடுஞ்சாலை, முரசொலி மாறன் மேம்பாலம் - பெரம்பூர் நெடுஞ்சாலை, ஸ்டீபன்சன் சாலையில் உள்ள வாகன நிறுத்தும் இடம் 8-ல் வாகனத்தை நிறுத்திவிட்டு 7-வது நுழைவு வாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

இருசக்கர வாகனத்துக்கு மட்டும்

* ஸ்டீபன்சன் சாலையில் உள்ள 9-வது வாகன நிறுத்தும் இடம் இருசக்கர வாகனத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

* வாகன நிறுத்தும் இடம் 11, அவசர தேவைக்கும், வெளியில் செல்வதற்கும் பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.

* நிகழ்ச்சிக்கு வாகனத்தில் வருபவர்கள் தயவு கூர்ந்து சாலைகளில் வாகனத்தை நிறுத்தி இறங்காமல் சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கூட்ட அரங்குக்கு நடந்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

* 1-வது நுழைவு வாயிலில் கண்டிப்பாக கார் பாஸ் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்