காங்கிரஸ் கவுன்சிலருடன் தி.மு.க.வினர் கடும் வாக்குவாதம்
பேரணாம்பட்டு நகராட்சி கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் விடியா ஆட்சி என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி கூட்டம்
பேரணாம்பட்டு நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையாளர் வேலவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-
அப்துல் ஹமீத் (சுயே):- நகராட்சிக்கு ரூ.19 லட்சம் செலவில் பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்:- இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குவாதம்
முஜம்மில் அஹம்மத் (காங்):- அம்பேத்கர் சவுக் முதல் ஏரி வரை செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும். பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பழக்கடைகளை், பூக்கடைகளை அகற்ற வேண்டும். எனது வார்டில் ஏகப்பட்ட குறைகள் இருக்கிறது. ஆணையாளரும், தலைவரும் வந்து பார்க்கவில்லை. விடியல் ஆட்சியில் பேரணாம்பட்டு நகராட்சியில் விடியலே கிடைக்காது. இது விடியாத ஆட்சி. இந்த ஆட்சியே சரியில்லை. நிர்வாகமும் சரியில்லை என கூறினார்.
அப்துல் ஜமீல் (தி.மு.க.):- ஆட்சியை பற்றி குறை சொல்லாதே, இந்தியாவே திரும்பி பார்க்கிற மாதிரி ஆட்சி நடக்கிறது என்றார். அனைத்து தி.மு.க. கவுன்சிலர்களும் காங்கிரஸ் கவுன்சிலர் முஜம்மில் அஹம்மத்திற்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் எழுந்து சென்று காங்கிரஸ் கவுன்சிலர் முஜம்மில் அஹம்மதிடம் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டனர்.
பரபரப்பு
இதனையடுத்து காங்கிரஸ் கவுன்சிலர் முஜம்மில் அஹம்மத் சமாளித்தவாறு நல்லாட்சி தான் நடக்கிறது என்றார். ஆனால் தி.மு.க. கவுன்சிலர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் கூச்சலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் முடிந்தது என எழுந்து வெளியில் சென்றனர்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.