கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தி.மு.க அரசு அனைத்து வகையிலும் உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், சம்பிரதாய நடவடிக்கையாக மட்டும் இருந்துவிடாமல், உறுதியோடு நின்று காவிரி நீரை பெற்றுத்தரும் முயற்சிகளை தொடர்ச்சியாக தி.மு.க அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எண்ணமும் விருப்பமும்.
காவிரி நீரை நம்பி பல லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், போதிய தண்ணீரின்றி தங்களின் பயிர் கருகுவதைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் காவிரி மேலாண்மை ஆணையமும் தெளிவான உத்தரவைப் பிறப்பித்த பிறகும் தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை கர்நாடக அரசு தர மறுத்திருப்பது கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசின் இச்செயல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
நீரின்றி போராடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தேவையான நீரை பெற்றுத் தர வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனோ, "இனி கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமம்" எனக்கூறி அப்பொறுப்பைத் தட்டிக் கழித்திருப்பது அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கும், அரசியல் அனுபவத்திற்கும் உகந்ததல்ல.
தனித் தீர்மானத்தின் மீது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை, தமிழக எம்.பி.க்கள் வழங்கிய மனு மீது மத்திய அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை, கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கவில்லை என்றெல்லாம் அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார்.
கர்நாடக காங்கிரஸ் அரசோடு அரசியல் தோழமையை வைத்துக்கொண்டு, பெற வேண்டிய நீரை பெறத் தவறிவிட்டு, அதற்கான முழு பொறுப்பும் மத்திய அரசுதான் என்று சொல்வது முதல்-அமைச்சரின் இயலாமையின் வெளிப்பாடுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
கர்நாடக முதல்-மந்திரி பதவியேற்பு நிகழ்வுக்கு ஓடோடிச் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசாதது ஏன் ? திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில் அக்கட்சியின் தேசிய அளவிலான தலைவர்களைச் சந்தித்து கர்நாடக மாநில முதல்-மந்திரிக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதில் தமிழக முதல்-அமைச்சருக்கு என்ன தயக்கம்? என விவசாயிகளே கேள்வி கேட்கும் சூழல் தான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. தி.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணியாலும், இவர்கள் கொண்டிருக்கும் தோழமையினாலும் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் இருக்கப் போவதில்லை என்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.
ஏற்கனவே, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை தமிழக நாடாளுமன்ற குழு சந்தித்து அளித்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக பாரதப் பிரதமரிடம் முறையிட்டு, தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தருவதே இப்போதைய அவசியமாகும்.
மேலும், வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழ்நாட்டு விவசாயிகளின் சூழலை எடுத்துரைப்பதோடு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தி.மு.க அரசு அனைத்து வகையிலும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.