தி.மு.க. பேச்சாளர் மீது கவர்னர் அவதூறு வழக்கு: சென்னை கோர்ட்டில் விரைவில் விசாரணை
தி.மு.க. பேச்சாளர் மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
சென்னை,
சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது அவர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறாகவும், கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கவர்னர் அலுவலகத்தின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையதளம் மூலமாகவும், தபால் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கவர்னர் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் அரசு வக்கீல் தேவராஜன், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக சென்னை செசன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தண்டிக்க வேண்டும்
அந்த மனுவில், 'விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கவர்னரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி உள்ளார். உள்நோக்கத்துடன் இவரது பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.
கவர்னர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதையும், பொது பணியில் ஈடுபடுவதையும் தடுக்கும் வகையில் இதுபோன்று களங்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.