தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெ.சு.திருவேங்கடம் மரணம்
கலசபாக்கம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெ.சு.திருவேங்கடம் மரணம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.பெ.சு.திருவேங்கடம் (வயது 89). இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அவர் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக இருந்தார். கலசபாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆட்சி காலம் முதல் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். தற்போது இவரது மகன் பெ.சு.தி. சரவணன் கலசபாக்கம் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இறந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான பெ.சு.திருவேங்கடத்தின் உடல் அவரது சொந்த ஊரான பெரியகிளாம்பாடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. .
திருவேங்கடம் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உட்பட கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திருவேங்கடம் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பெ.சு.திருவேங்கடம் உடல் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் சொந்த ஊரான பெரிய கிளாம்பாடியில் அடக்கம் செய்யப்படுகிறது.