அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தி.மு.க. ஒருபோதும் அடிபணியாது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தி.மு.க. ஒருபோதும் அடிபணியாது -அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலாவை சென்னை காளிகாம்பாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இந்த சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரே நாளில் பல்வேறு அம்மன் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் இறை தரிசனம் செய்ய முடியும்.
ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துகளை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு தனியாருக்கும் தரப்படவில்லை. ஆளவந்தாரின் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வியாசர்பாடி சாமியார் தோட்டம், கரபாத்திர சாமிகளின் சீடராக இருந்த சகஜானந்தா சாமியின் நினைவை போற்றும் வகையில் அந்த பகுதியில் உள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்டுவது குறித்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை சோதனையை பொறுத்தவரை முதல்-அமைச்சர் கூறிய அதே கருத்தைதான் நானும் கூறுகிறேன். ஏற்கனவே தி.மு.க. அரசுக்கு எதிராக கவர்னர் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். அமலாக்க துறையும், அந்த பிரசார அணியில் இணைந்து இருக்கின்றது. சட்டப்படி அதை எதிர்கொள்கின்ற வல்லமை பொன்முடிக்கு உண்டு.
இதுபோன்ற சோதனைகளுக்கும், மிரட்டல் உருட்டல்களுக்கும் தி.மு.க. எந்நாளும் பணியாது. முன்பை விட வேகமாக தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் தி.மு.க. இயங்கும்.
இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து எங்களை காப்பதற்கு மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.