தி.மு.க. கவுன்சிலர்கள் திடீர் மோதல்
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரின் ஆதரவாளர்களும் அங்கே திரண்டதால் பரபரப்பு நிலவியது
கள்ளக்குறிச்சி.
நகராட்சி கூட்டம்
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நேற்று மாலை நகராட்சி தலைவர் சுப்ராயலு தலைமையில் நடைபெற்றது. ஆணையர் குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் மாலை 6 மணியளவில் முடிந்ததை அடுத்து கூட்ட அரங்கில் இருந்து அனைத்து கவுன்சிலர்களும் வெளியே வந்தனர். அப்போது 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஞானவேலுவிடம் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் யுவராணி, இவரது கணவர் ராஜா மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளரும், 15-வது வார்டு கவுன்சிலருமான பாபு ஆகியோர் எங்கள் குடும்பத்தை பற்றி ஆபாசமாக பேசி சமூகவலைத்தளத்தில் எப்படி வெளியிடலாம் என தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
போலீசார் விரைந்தனர்
இதைப்பார்த்து அங்கிருந்த சக கவுன்சிலர்கள் ஓடி சென்று அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த 17-வது வார்டு கவுன்சிலர் ஞானவேலுவின் ஆதரவாளர்கள் மற்றும் 5-வது வார்டு கவுன்சிலர் யுவராணியின் ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இது பற்றிய தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் நகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில் கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மூக்கப்பன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு கள்ளக்குறிச்சி நகராட்சி முன்னாள் செயலாளரும், மாவட்ட முன்னாள் பொருளாளருமான கென்னடி முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
மோதலுக்கு காரணம் என்ன?
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக எப்படி வேறு ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய போகலாம் என முன்னாள் நகர செயலாளரும், முன்னாள் மாவட்ட பொருளாளருமான கென்னடியையும், அவரது குடும்பத்தையும் பற்றி 17-வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் ஞானவேல் ஆபாசமாக பேசி ஆடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும், இதனால் அவர்களுக்கிடையே மோதல் நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.