கவர்னரை கண்டித்து தி.மு.க. பொதுக்கூட்டம்; கனிமொழி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

கவர்னரை கண்டித்து சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-04-12 18:51 GMT

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம், சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று நடந்தது.

பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்பட தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நல்ல பாடம்

பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசும்போது, 'கவர்னர் தனது பதவி, தனது நிலை என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் கவர்னருக்கு தமிழகம் நல்ல பாடத்தை சொல்லித்தரும்' என்று தெரிவித்தார்.

கி.வீரமணி பேசும்போது, 'இந்தியாவிலேயே சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கவர்னர் ஆர்.என்.ரவி தான். அவர் திருந்த வேண்டும்' என்று தெரிவித்தார்.

அரசியல் சட்ட விதிகள்

வைகோ பேசும்போது, 'கவர்னர் என்பவர் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும். அரசு நிர்வாகத்தில் குறுக்கீடு காட்டக்கூடாது. ஆனால் அரசு இலச்சினை இல்லாமல் விழா நடத்துகிறார். தனது இஷ்டத்துக்கு செயல்படுகிறார். அரசியல் சட்ட விதிகளை தொடர்ந்து மீறி வருகிறார். கவர்னர் தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், துணை செயலாளர் வி.பி.மணி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எம்.பி. பழனி மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்