தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே வாணக்கன்காடு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வாணக்கன்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதி இல்லாமல் நடத்தி வந்த பாரில் சோதனை செய்தனர்.
அப்போது டாஸ்மாக் கடை அருகே மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்று கொண்டிருந்த பரிமளம் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் ஏற்ற முயன்றனர்.
தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
அப்போது பாரின் உரிமையாளரும், புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பிரதிநிதியுமான முன்னாள் வாணக்கன்காடு ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் (வயது 55) மற்றும் அவரது மகன் ஆகியோர் சேர்ந்து கைது செய்யப்பட்ட பரிமளத்தை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்தனர். மேலும் போலீசாரை தாக்க முயன்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல், போலீசாரை தாக்க முயற்சி, போலீசாரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.