தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பா.ஜனதாவினர் உண்ணாவிரதம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2022-07-05 16:32 GMT

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பா.ஜனதா கட்சி சார்பில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துகுமார் வரவேற்றார். பொதுச்செயலாளர்கள் கங்காதரன், கோவிந்தராஜ், செயலாளர் துரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.

மேலும் பூரண மதுவிலக்கு, கல்விக்கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை ரூ.1,000, இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் போதைபொருள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்