சேலத்தில் தி.மு.க., பா.ஜனதாவினர் மோதல்; 2 பேர் காயம்

சேலத்தில் தி.மு.க., பா.ஜனதா கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். பா.ஜனதாவினரின் சாலை மறியல் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-19 22:41 GMT

வாக்குவாதம்

அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாதம் ரூ.54 செலுத்தினால், வயது முதிர்வின் போது அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்துக்கு உறுப்பினர் சேர்ப்பதில் சேலம் சிவதாபுரம் பகுதியில் தி.மு.க.வினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தினர்.

இந்தநிலையில் மதியம் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பா.ஜனதாவை சேர்ந்த கார்த்தி (வயது 30), ராகுல் (25) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறியல் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா நிர்வாகிகள், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். பின்னர் மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்