தி.மு.க. நிர்வாகியால் ராணுவ வீரர் படுகொலை: சென்னையில் நாளை பா.ஜ.க. உண்ணாவிரதம் -அண்ணாமலை
தி.மு.க. நிர்வாகியால் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி நடக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் தி.மு.க.வினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப்பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், தி.மு.க. நிர்வாகியால் படுகொலை செய்யப்படுகிறார். சட்டமும், காவல்துறையும், தன்னை ஒன்றும் செய்யாது என்று படுகொலை செய்த நபர் கொக்கரிக்கிறார்.
பா.ஜ.க. பட்டியல் இனப்பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலைவெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள் அவருக்கு இருப்பதை எடுத்துச் சொல்லி, அவரின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரை நியமிக்க வேண்டி, காவல் உயர் அதிகாரியிடம், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தாக்குதலும், இழப்பும் நேரிட்ட பிறகு பாதுகாப்பு வழங்கி என்ன பயன்?.
பேரணி, உண்ணாவிரத போராட்டம்
இலவசங்களுக்கும், இரண்டு, மூன்றாயிரம் ரூபாய்களுக்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், தி.மு.க. ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் 21-ந்தேதி (நாளை) சென்னையில் நடைபெற இருக்கிறது.
தி.மு.க. அரசு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரி அருகில் இருந்து, போர் நினைவுச் சின்னம் வரை, திராவிட மாடல் இருளை போக்கும் விதமாக, மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது.
முன்னதாக, நாட்டைக் காக்கும் ராணுவ வீரரை நடுத்தெருவிலே அடித்துக் கொன்ற தி.மு.க.வை கண்டித்து, 21-ந்தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு சிவானந்தா சாலையில், என் தலைமையில் ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.