தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்-வைகோ பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ம.தி.மு.க. மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசினார்.

Update: 2023-07-28 20:03 GMT

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ம.தி.மு.க. மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசினார்.

மண்டல நிர்வாகிகள் கூட்டம்

ம.தி.மு.க. சார்பில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக ம.தி.மு.க. மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமை தாங்கினார். புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் வெற்றி பெற்று உள்ளோம். தமிழக மக்களின் நலனுக்காக ம.தி.மு.க. அதிக போராட்டங்களை நடத்தி வருகிறது.

குடியரசு தலைவரிடம்...

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம் செய்வதும் வாடிக்கையாகி விட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக கவர்னரை பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆடுதுரை முருகன், மாநில துணை பொதுச்செயலாளர் ரொஹையா, அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா உள்ளிட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்