சிவகாசி,
சிவகாசி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் திருத்தங்கலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வன ராஜா, கட்சியின் மேலிட பொறுப்பாளர் மதுரை பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்தங்கல் நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் பொன்சக்திவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க உத்தரவிட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பல்வேறு அறிவிப்புகளை வழங்கி ஊக்குவித்து வரும் அமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் பூங்கா அமைய நடவடிக்கை எடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. சிவகாசி மாநகர பகுதியில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து வரும் மாநகராட்சி மேயர், துணை மேயருக்கு பாராட்டு தெரிவிப்பது, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கட்சியின் வளர்ச்சிக்காக சிவகாசி மாநகர பகுதியில் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் குருசாமி, சேவுகன், பகுதி செயலாளர்கள் சபையர் ஞானசேகரன், காளிராஜன், மாரீஸ்வரன், ஆ.செல்வம் தங்கராஜ், மாணிக்கம், ரவிசெல்வம், வெயில்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ், மைக்கேல், இளைஞரணி செந்தில், மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.