தி.மு.க. வேட்பாளர் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
அம்மூர் பேரூராட்சி மன்ற தலைவராக தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மூர் பேரூராட்சி மன்ற தலைவராக தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைவர் தேர்தல்
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சி தலைவராக இருந்த ஏ.கே.சுந்தரமூர்த்தி உடல்நிலைக் குறைவால் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து புதிய தலைவரை ேதர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலை செயல் அலுவலர் சரவணன் (பொறுப்பு) நடத்தினார்.
இத்தேர்தலில் 4-வது வார்டில் சுயேச்சையாக வெற்றி பெற்று பின்னர் தி.மு.க. ஆதரவாளராக செயல்பட்ட சங்கீதா மகேஷ் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார்.
அ.தி.மு.க.சார்பில் பேரூர் செயலாளர் தினகரனின் மனைவியும் 15- வது வார்டு கவுன்சிலருமான வரலட்சுமி தினகரன் போட்டியிட்டார்.
மொத்தம் உள்ள 14 வாக்குகளில் 7 வாக்குகள் சங்கீதா மகேஷ் பெற்றதாகவும், 6 வாக்குகள் வரலட்சுமி தினகரன் பெற்றதாகவும், ஒரு வாக்கு செல்லாதவை எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சங்கீதா மகேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வினர் மறியல்
இதற்கு எதிர்பர்பு தெரிவித்து அங்கு திரண்ட அ.தி.மு.க.வினர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ தலைமையில், ராணிப்பேட்டை -சோளிங்கர் சாலையில், அம்மூர் பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.
அவர்களிடம் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பேரூராட்சியை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கலந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அம்மூரில் பரபரப்பு ஏற்பட்டது.