எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் கைகலப்பு

எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் கைகலப்பில் ஈடுபட்டனர். நகராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-27 20:39 GMT

எடப்பாடி:

எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் கைகலப்பில் ஈடுபட்டனர். நகராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி கூட்டம்

எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகராட்சி கூட்டம் தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சசிகலா, துணைத்தலைவர் ராதா நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் முருகன், மேலாளர் (பொறுப்பு) சேரலாதன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

எடப்பாடி நகராட்சி வருவாய் ஆய்வாளர் குமரகுருபரன் 21 தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். 5-வது தீர்மானமாக, பூலாம்பட்டியில் உள்ள எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு ரூ.10 லட்சம் செலவு செய்துள்ளது என்றார்.

தள்ளுமுள்ளு

அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் முருகன், இந்த செலவினங்களுக்கு கணக்கு காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நகராட்சி தலைவர், அலுவலகத்திற்கு வந்து கணக்குகளை சரிபார்த்து கொள்ளுங்கள் என்றார்.

ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர் முருகன், அடுத்த தீர்மானத்தை படிக்க கூடாது என வலியுறுத்தி வருவாய் ஆய்வாளர் குமரகுருபரனை நோக்கி சென்றார். நகராட்சி தலைவர் பாஷா உடனே முருகனை தடுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அதிகாரிகள் விலக்கி விட்டனர். பின்பு நகராட்சி கூட்டத்தை முடித்து கொண்டனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் கவுன்சிலர் முருகன் உள்பட அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் பாஷா மன்னிப்பு கேட்கும் வரை, நகராட்சி கூட்ட அரங்கில் இருந்து வெளியேற மாட்டோம் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்