தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காரசார வாக்குவாதம்
ஊட்டியில் 10 ஆண்டு கால வளர்ச்சி பணி குறித்து நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காரசார வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டியில் 10 ஆண்டு கால வளர்ச்சி பணி குறித்து நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காரசார வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஜார்ஜ் (தி.மு.க.):- ஊட்டியில் உள்ள கேளிக்கை பூங்காக்கள் முறையான அனுமதியுடன் இயங்குகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.
முஸ்தபா (தி.மு.க.):- சேரிங்கிராஸ் பகுதியில் ஒரு தனியார் ஓட்டலின் மேற்புறம் உள்ள கட்டிடம் நீதிமன்ற உத்தரவுபடி இடிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்காலிக பணிநீக்கம்
அபுதாகீர் (தி.மு.க.):- பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் மழை பெய்தால் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. நகராட்சி பணியாளர்களின் குடியிருப்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன.
கீதா (25-வது வார்டு):- நகராட்சியில் குப்பைகள் அகற்றுவது, கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்துவது போன்ற அடிப்படை பணிகளை நகராட்சி பணியாளர்கள் சரிவர மேற்கொள்ள வேண்டும்.
ஆணையாளர் காந்திராஜன்: கவுன்சிலர்கள் தெரிவிக்கும் பணிகளை சரியாக செய்யாவிட்டால் நகராட்சி பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
செல்வராஜ் (32-வது வார்டு):- தற்போது பள்ளிகள் திறந்து விட்டதால் திறந்தவெளி சாக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். நொண்டிமேடு பகுதியில் புதர்களை அகற்ற வேண்டும்.
ராஜேஷ்வரிபாபு (29-வது வார்டு):- மரவியல் பூங்கா பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும். நகராட்சி கடைகள் ஏலம் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
வளர்ச்சி திட்ட பணிகள்
ரஜினிகாந்த்:- கனமழை பெய்யும் போது சேரிங்கிராஸ், கீரின்பீல்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார் பேசும்போது, ஊட்டி ஏரியை ஆழப்படுத்த வேண்டும். கோடப்பமந்து கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் இந்த பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டு எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காரசாரமாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.