தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்

குன்னூர் நகராட்சி கூட்டத்தில், தினசரி சந்தையில் கடை வாடகை உயர்த்தியது தொடர்பாக தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-29 19:00 GMT

குன்னூர்

குன்னூர் நகராட்சி கூட்டத்தில், தினசரி சந்தையில் கடை வாடகை உயர்த்தியது தொடர்பாக தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி கூட்டம்

குன்னூர் நகராட்சி அலுவலக மன்ற அரங்கில் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ஷீலா கேத்தரின் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.

தாஸ் (தி.மு.க.):- தற்போது ஒரே இடத்தில் 2 வார்டுகளின் மைய பகுதி உள்ளதால், அங்கு பணிகள் செய்தால் போலீசில் புகார் தெரிவிப்பதாக குற்றம் சாட்டினார்.

உமாராணி (அ.தி.மு.க.):- அந்த வார்டில் பணிகள் நடைபெற்றால் முறையாக கவுன்சிலருக்கு தெரிவித்து பின்பு பணிகளை தொடங்க வேண்டும். மேலும் தன்னை ஒருமையில் பேசிய கவுன்சிலர் மன்னிப்பு கேட்க வேண்டும். பின்னர் 2 தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வெளிநடப்பு

ரங்கராஜன் (அ.தி.மு.க.):- குன்னூர் மார்க்கெட் பகுதியில் தினசரி சந்தையில், கடை வாடகை வசூல் செய்யும் போது தினமும் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்தால் வியாபாரிகளுக்கு ஏதுவாக இருக்கும்.

ராமசாமி (தி.மு.க.):- அ.தி.மு.க. ஆட்சியில் கடை வாடகையை அதிகப்படுத்தியதால் இந்த பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெகநாதன் (தி.மு.க.):- எனது வார்டில் உள்ள வண்ணாரப்பேட்டை ரேஷன் கடை முன்பு கழிவுநீர் செல்வது குறித்து பல முறை புகார் கூறினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வந்துள்ளது என்று கூறி 'தினத்தந்தி' நாளிதழை காட்டினார். மேலும் அவர் இதற்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

ஆணையாளர்:- சாக்கடை கழிவுநீர் பிரச்சினைக்கு அடுத்த கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்