தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் வெற்றி
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட திட்டக்குழு தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட திட்டக்குழு தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.
திட்டக்குழு தேர்தல்
கோவை மாவட்ட திட்டக்குழுவுக்கு மாவட்ட ஊராட்சிகளில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 என மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதில் திட்டக்குழுவுக்கு ஊராட்சியில் 5 இடங்க ளுக்கு 9 பேரும், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட் சியில் 13 இடங்களுக்கு 35 பேரும் என மொத்தம் 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் திட்டக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 822 உறுப்பினர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் பணியாற்றினார்.
ஓட்டுப்போட்டனர்
கலெக்டர் அலுவலக வளாக கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் கவுன்சிலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஓட்டு சீட்டில், வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் முத்திரையிட்டு அங்கிருந்து ஓட்டுப்பெட்டியில் போட்டனர்.
கோவை மாவட்ட ஊராட்சியில் பதிவான வாக்குகள் மாலை 3 மணிக்கு எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த கோபால்சாமி 15 ஓட்டுகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த கந்தசாமி, சக்திவேல், தி.மு.க.வை சேர்ந்த ராஜன் ஆகியோர் தலா 9 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
குலுக்கலில் தேர்வு
ஆனால் பிரதீப், ராதாவேணி உள்பட 4 வேட்பாளர்கள் ஒரே மாதிரியாக 8 ஓட்டுகள் பெற்றிருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் அ.தி.மு.க.வை சேர்ந்த பிரதீப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வாக்களித்த ஓட்டு சீட்டுகள் எண்ணும் பணி நேற்று இரவு 8.30 மணி வரை நீடித்தது.
வாழ்த்து
அதில் எஸ்.அப்துல்காதர் (584 வாக்குகள்), உமாமகேஷ்வரி (580), செல்வராஜ் (580), எம்.சிவா (574), கபிலன் (573), ஜம்ருத்பேகம் முகமதுயூனூஸ் (573), கனகராஜ் (570), ஸ்ரீதரன் (570), கிருஷ்ண குமாரி (567), மோகனப்பிரியா (567), மனோகரன் (564), சிரவை சிவா (559), ராமு (556) ஆகிய 13 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற உறுப்பினர்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட செயலாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
15 ஓட்டு பெற்ற பா.ஜனதா கவுன்சிலர்
கோவை மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 17 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர், பா.ஜனதா கவுன்சிலர்கள் 2 பேர், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 8 பேர் உள்ளனர்.
திட்டக்குழு உறுப்பினருக்கான தேர்தலில் மாவட்ட ஊராட்சி யில் இருந்து 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த திட்டக்குழு தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா கட்சியை சேர்ந்த கோபால்சாமி 15 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
எனவே அவருக்கு தி.மு.க. கூட்டணியை சில கவுன்சிலர்களும் வாக்களித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.