தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.
அதன்படி வேலூர் கோட்டை காந்திசிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது நீட்தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட்தேர்வு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போட்டு வரும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியையும், நீட்தேர்வை திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து அவர் பேசினார்.
வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ப.கார்த்திகேயன், அமலுவிஜயன், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, துணைமேயர் சுனில்குமார் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
உண்ணாவிரத போராட்டத்தை எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் முடித்து வைத்தார்.