தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
விருதுநகரில் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்.
விருதுநகர்,
விருதுநகரில் கல்லூரி சாலையில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொறிகிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார்கள்.
வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் விதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி பேசியதாவது:-
நான் கட்சி அமைப்பு ரீதியாக 42 மாவட்டங்களில் கலந்து கொண்டு இதுவரை ரூ.40 கோடி அளவுக்கு, கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி உள்ளேன். எந்த மாவட்டங்களுக்கு அழைத்தாலும் நான் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்தால் மாவட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறித்தான் அனைத்து மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறேன். அந்த வகையில் இங்கும் மாவட்ட செயலாளர்கள் 2 ஆயிரம் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 500 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார். அப்போது அவர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார். நான் அந்த வாழ்த்தை எனக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தெரிவித்ததாக கருதுகிறேன்.
இதுவரை தி.மு.க. சார்பில் கட்சி முன்னோடிகளுக்கு ரூ.5½ கோடி மருத்துவ நிதி உதவியும், இளைஞர் அணி சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
பாதம் தொட்டு வணங்குகிறேன்
இங்கு வந்துள்ள கழக முன்னோடிகள் தந்தை பெரியாரை பார்த்தவர்கள். அண்ணாவுடன் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள். ஐந்து முறை தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக உழைத்தவர்கள். தற்போது தளபதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகவும் உழைத்தவர்கள். ஆனால் நான் தந்தை பெரியாரையோ அண்ணாவையோ பார்த்ததில்லை. ஆகையால் நான் இந்த கழக முன்னோடிகளை பார்த்து பொறாமை அடைகிறேன். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
டிசம்பரில் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர்கள் மாநாட்டிற்கு உங்கள் வாழ்த்துக்கள் தேவை. எனவே நீங்கள் வாழ்த்த வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.