விருத்தாசலத்தில் தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்தது

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-08-10 23:41 GMT

விருத்தாசலம்,

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வஞ்சிப்பதாக கூறி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்தும் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்று வா, வென்று வா

வன்முறைகளே இல்லாமல் நாட்டுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும், மக்களின் உரிமைக்காக போராடும் இயக்கம் தே.மு.தி.க.. கேப்டன் விஜயகாந்த் சூப்பராக இருக்கிறார்.

நான் இன்று விருத்தாசலம் செல்கிறேன் என்று கூறினேன். சென்று வா வென்று வா என்றார். என் மக்களை கேட்டதாக சொல் என்றார். வெகு விரைவில் விருத்தாசலத்தில் ஒரு மாநாடு அல்லது மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு கேப்டன் விஜயகாந்த் வருவார். கடலூர் மாவட்டம் தே.மு.தி.க.வின் முதன்மையான மாவட்டம்.

என்.எல்.சி.க்கு கண்டனம்

இந்த தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அனைத்து பெண்களுக்கும் 1,000 ரூபாய் வந்துவிட்டதா என்றால் இதுவரை வரவில்லை. தி.மு.க. திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். இந்தியா முழுக்க இந்த ஆட்சி தேவை என்கிறார்கள். தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதி, தேர்தலுக்கு பின் ஒரு வாக்குறுதி. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

விளைநிலங்களை அழித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பரவனாறு வாய்க்காலை சீரமைக்கிறோம் எனக் கூறி ஒட்டுமொத்த விளைநிலங்களையும் பாழடித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி. நிர்வாகமே உங்களது செயலை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தமிழகம் முழுவதும், தே.மு.தி.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தே.மு.தி.க. ஆதரவு

நெய்வேலியில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி முதல், சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 16-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

அதன்படி, நேற்று நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மதியம் நெய்வேலிக்கு வந்தார். தொடர்ந்து அவர் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களை சந்தித்து அவரது ஆதரவை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்