பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்- பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

ஈரோட்டில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

Update: 2022-05-27 20:50 GMT

ஈரோடு

ஈரோட்டில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டம்

பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆலைகள் மூடப்பட்டு, வேலைவாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோதுமை ஏற்றுமதியை தடை செய்தது போல் பஞ்சு ஏற்றுமதியை தடுக்க வேண்டும். பஞ்சு பதுக்கலை தடுத்து, பதுக்கப்பட்ட பஞ்சு மற்றும் நூலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். போலியாக பற்றாக்குறை இருப்பதை போல் ஒரு மாயையை ஏற்படுத்தி இருப்பதை கண்டிக்கிறோம்.

தேர்தல் வாக்குறுதி

ரூ.50 ஆயிரமாக இருந்த ஒரு கண்டி (356 கிலோ) பஞ்சு, இன்று ரூ.1 லட்சத்து 15 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. இப்படி உயர்ந்தால் எப்படி ஆலைகளை நடத்த முடியும். தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியும். உடனடியாக பஞ்சு விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் 19.4 சதவீதம் ஜவுளி ஏற்றுமதி செய்யக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. உலகத்திலேயே இந்தியா 3-வது நாடாக ஜவுளித்துறையில் உள்ளது.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அனைத்து பொருட்களின் விலை உயர்வும் மக்களை பாதித்துள்ளது. நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து, நடிகர் சங்கத்தை எப்படி மீட்டெடுத்தாரோ, அதேபோல் தமிழகத்தின் கடனை அடைத்து தமிழகத்தை விஜயகாந்த் மீட்டெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்