ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும்- ஈரோட்டில் கி.வீரமணி பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என்று ஈரோட்டில் கி.வீரமணி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என்று ஈரோட்டில் கி.வீரமணி கூறினார்.
அரசியல் களம்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டிற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்து கொண்டார். பின்னர் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
அண்ணா நினைவு நாளான இன்று (அதாவது நேற்று) திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி, மாநில உரிமை, சேது சமுத்திர கால்வாய் திட்டம் இதையெல்லாம் மையப்படுத்தி பிரசாரத்தை ஈரோட்டில் தொடங்க இருக்கின்றோம். ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம். ஆகவே இடைத்தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார்.
திருப்புமுனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும். மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக்கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும்.
அண்ணாமலை -எடப்பாடி சந்திப்பு குறித்த கேள்விக்கு, எதுவாக இருந்தாலும் நஷ்ட கணக்கில் இருந்தவர்கள் மீள முடியாது. அடமான பொருள் எப்போது திரும்பி மீட்கிறார்களோ அப்போதுதான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட பெறமுடியும். இல்லையென்றால் அதையும் இழக்க கூடிய சூழ்நிலையை இந்த தேர்தல் ஏற்படுத்தும். நாளை நடப்பதை யார் அறிவார் என்ற பாட்டு பாடக்கூடிய பரிதாப நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.