சென்னை கடைவீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது

சென்னை கடைவீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது. புத்தாடை, பட்டாசு வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.

Update: 2022-10-24 00:17 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். தீபாவளிக்கு முந்தைய தினம் என்பதால், நேற்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்கள் வழியாகவும் சென்ற ரெயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

காற்று உள்ளே புகாத அளவுக்கு பயணிகள் இருக்கைகளில் நிறைந்து இருந்தனர். ஊருக்கு சென்றால் போதும் என்ற முனைப்பில் நெருக்கடியில் ஒருவருக்கொருவர் பிணைந்தவாறு அமர்ந்திருந்தனர். கூட்ட நெரிசல் நிரம்பி வழிந்ததால் ஒரு முனையில் இருந்து மறுமுனையில் உள்ள கழிவறைக்கு செல்ல 'ஸ்பைடர் மேன்' போன்று பயணிகள் சிலர் இருக்கைகளை பிடித்து தொங்கியவாறு, சாகசம் செய்தவாறு சென்ற வேடிக்கையான காட்சியையும் பார்க்க முடிந்தது.

நிரம்பிய இருக்கைகள்

இதேபோல, சென்னையில் இருந்து புறப்பட்டு வெளியூர்களுக்கு சென்ற அரசு பஸ்களிலும் கூட்டம் காணப்பட்டது. கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்துக்கு நேற்று காலை முதலே பயணிகள் தங்கள் உடைமைகளோடு வந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்களில் பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு ஏறி, சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதேபோல தனியார் ஆம்னி பஸ்களும், அனைத்து இருக்கைகளும் நிரம்பியவாறு சென்றன.

கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் விமானம் மூலமாக தமிழகத்துக்கு உள்ளே செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுதவிர சொந்த கார், வாடகை கார்கள் மூலமாகவும், மோட்டார் சைக்கிள் மூலமாகவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் வழக்கம்போல் தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு, போரூர், வண்டலூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

தீபாவளி விற்பனை

தியாகராயநகர், பாண்டி பஜார், புரசைவாக்கம், பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வாங்குவதற்காக நேற்று இறுதிக்கட்ட கூட்டம் அலைமோதியது.

சென்னையில் உள்ள கடைவீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது. வானில் இருந்து எதை வீசினாலும் கீழே விழாதவகையில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தது. இதனால் அந்த பகுதிகளில் துணிக்கடைகள் உள்ள சாலைகள் திக்குமுக்காடின. தீவுத்திடலில் பட்டாசு விற்பனையும் உச்சக்கட்டம் அடைந்தது. கோயம்பேடு பூ, காய்கறி மார்க்கெட்டிலும் தீபாவளி விற்பனை நேற்று களைகட்டியது.

சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தையும் கடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் சென்னைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தீபாவளியை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று கனவுகளை சுமந்துகொண்டு, சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றவர்கள், கொண்டாடிய நினைவுகளுடன் நாளை மறுதினம் முதல் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு வருபவர்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்