களைகட்டும் தீபாவளி விற்பனை... மதுரை மாசி வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
திருட்டு சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை,
தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடுவதற்கு உற்சாகமாக தயாராகி வருகின்றனர். மொத்த விற்பனையகங்கள், சில்லறை விற்பனை அங்காடிகள் உள்ளிட்டவற்றில் தற்போது தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் மதுரையில் உள்ள நான்கு மாசி வீதிகளிலும் இன்று மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அங்கு ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இது தவிர சாலையோரங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
குறிப்பாக மேலமாசி வீதி, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனிடையே கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமரா, கண்காணிப்பு கோபுரங்கள் மூலமாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.