தீபாவளி பண்டிகை: தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் மும்முரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பட்டாசு கடைகள் 17-ந்தேதிக்குள் திறக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

Update: 2022-10-09 23:24 GMT

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

இதையொட்டி தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழலில் தீவுத்திடலில் 40 பட்டாசு கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரையறுத்த விதிமுறைகளின்படி 10 அடி இடைவெளியில் ஒவ்வொரு கடையும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜார்ஜ்டவுன் அனைத்து வணிகர் நல சங்க தலைவர் பி.அனீஸ்ராஜா கூறியதாவது:-

17-ந்தேதிக்குள் திறக்க திட்டம்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீவுத்திடலில் எல்லா பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி 40 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பணிகள் முழுவதும் நிறைவடைந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதிக்குள்ளாக பட்டாசு கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

தீவுத்திடல் பட்டாசு கடைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவரிடம் அனுமதியும் கேட்டிருக்கிறோம். அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்பட பலரும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள்.

25 சதவீத சலுகையில்...

தீபாவளி பண்டிகையையொட்டி கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளோம். அதாவது பட்டாசு கடைகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து 21-ந்தேதி வரை பட்டாசுகளை 25 சதவீத தள்ளுபடி விலையில் பொதுமக்கள் வாங்கிடலாம். 21-ந்தேதிக்கு பிறகு இந்த சலுகை இருக்காது. தேவைப்படும் பட்சத்தில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

அதேபோல இந்த ஆண்டு பசுமை பட்டாசுகள் அதிகளவில், அதிக ரகங்களில் தயாராகி விற்பனைக்கு வரவிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, விபத்துகளை ஏற்படுத்தாத வகையிலும் வெடிகள் தயாராகி இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கொரோனா தாக்கம் ஓய்ந்த நிலையில் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முறை பட்டாசு தொழிலை முன்னெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்