தீபாவளி போனஸ் போதுமானது அல்ல; தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழக அரசு போனஸ் அறிவிப்பினை மறுபரிசீலனை செய்து வழக்கம் போல் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவிகித போனஸ் போதுமானதல்ல. இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த கொரோனா காலங்களில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் கூட 10 சதவிகித போனஸ் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது நாடு பொருளாதார இழப்பில் இருந்து மீண்டெழுந்து, சகஜ நிலைக்கு திருப்பியுள்ளது. வழக்கம் போல் அனைத்து பேருந்துகளும் இயங்குகிறது. அனைத்து தொழில் நிறுவனங்களும் சீராக இயங்குகின்றது.
இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்திற்கு முன்னர் வழங்கியது போல் தற்போதும் 20 சதவிகிதம் போனஸ் தொகை கிடைக்கும், இந்த வருடம் பண்டிகையை மனநிறைவோடு கொண்டாடலாம் என்று எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருந்த தொழிலாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு போனஸ் அறிவிப்பினை மறுபரிசீலனை செய்து வழக்கம் போல் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.