விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவோம்

தீ விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

Update: 2022-10-23 18:45 GMT

தொண்டி, 

தீ விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

விழிப்புணர்வு

திருவாடானை தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்தில்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:- தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மற்றவர்களுக்கும், முதலில் தன் உயிரை காப்பாற்றி கொண்டு தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்க வேண்டும். கழிவு குப்பைகளை குடிசை அருகில் எரிக்க வேண்டாம். குடிசை அருகில் வைக்கோல் போர்களை வைக்க வேண்டாம். மண்எண்ணெய் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது மண்எண்ணெயை ஊற்றக்கூடாது. நெருப்புடன் கூடிய சாம்பலை குப்பை தொட்டியில் கொட்டாதீர்கள். மின்சுவிட்சை கையாளும்போது ஈர கையுடன் தொடக்கூடாது.

கையில் எடுக்க கூடாது

அதேபோல் தீபாவளியை தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாட பெரியவர்கள் மேற்பார்வையில்தான் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். ஒரு வாளியில் தண்ணீர் மற்றும் ஒரு வாளியில் மணல் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட ஊதுபத்தி உபயோகித்து பட்டாசு வெடிப்பது நல்லது. அவ்வாறு செய்யும்போது முகத்தினை வேறு பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீருக்குள் வாளியிலோ அல்லது உலர்ந்த மணலில் வைக்க வேண்டும். வெடி வெடிக்கும் போது நைலான் சில்க் துணிகள் அணிவதை தவிர்க்கவும். பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

விபத்தில்லா தீபாவளி

பட்டாசு கடைகள், கியாஸ் சிலிண்டர் கிடங்குகள், வைக்கோல் போர், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மின்சார டிரான்ஸ்பார்மர் போன்ற பகுதிகளில் வெடிகள் வெடிக்க கூடாது. பாட்டில், டப்பாக்களில் வைத்து பட்டாசு வெடிக்க கூடாது.

பட்டாசு வெடிக்கும் போது தீ புண்கள் ஏற்பட்டால் குளிர்ந்த நீர் ஊற்றி மெல்லிய துணியால் மூடி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். பாதுகாப்பாக பட்டாசு வெடித்து விபத்தில்லா தீபாவளி கொண்டாடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்