மாவட்ட டாஸ்மாக் மேலாளர்- விற்பனையாளர் வீடுகளில் சோதனை ரூ.1¾ லட்சம் சிக்கியது

நாகர்கோவிலில் குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1.77 லட்சம் சிக்கியது.

Update: 2022-10-14 19:20 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1.77 லட்சம் சிக்கியது.

கண்காணிப்பு

குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக விஜய சண்முகம் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை செல்லன் நகர் ஆகும்.

இதனால் இவர் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு பகுதியில் உள்ள மாடி கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில் இவர் டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும், அதற்கு ஒரு டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் உடந்தையாக இருப்பதாகவும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில தினங்களாக டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

சுற்றி வளைப்பு

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் டாஸ்மாக் மேலாளர் அறை எடுத்து தங்கியுள்ள பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பெஞ்சமின், ரமா, பொன்சன் மற்றும் போலீசார் மப்டி உடையிலும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கான வருவாய்த்துறை ஆய்வுப்பிரிவு துணை கலெக்டர் மூர்த்தியும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் டாஸ்மாக் மேலாளரின் கார் சென்றது. அங்குள்ள பைப்புவிளை என்ற பகுதியில் டாஸ்மாக் மேலாளர் விஜய் சண்முகம் காரை விட்டு இறங்கி சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளரும், டாஸ்மாக் மேலாளரின் கார் டிரைவருமான ரெஜின் (47) தனது வீட்டில் இருந்து வந்து, விஜய சண்முகத்தின் காரை எடுக்க முயன்றார். இந்தநிலையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெஜினையும், டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகத்தையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

ரூ.1.77 லட்சம் பறிமுதல்

பின்னர் அவர்கள் 2 பேரையும் டதி பள்ளி சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெஜின், டாஸ்மாக் கடைக்காரர்களிடம் லஞ்சமாக பணம் பெற்று மேலாளருக்கு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இவ்வாறு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் வசூலித்ததும், அந்தத் தொகையை தனது வீட்டில் பதுக்கி வைத்து இருப்பதாகவும் போலீசாரிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து போலீசார், ரெஜினை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு மறைத்து வைத்திருந்த ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் டதி பள்ளி சந்திப்பு பகுதியில் உள்ள மேலாளர் விஜய சண்முகத்தின் அறையிலும் சோதனையிட்டனர். ஆனால் அங்கு பெரிய அளவில் பணம் எதுவும் சிக்கவில்லை. செலவுக்காக விஜய சண்முகம் வைத்திருந்த பணம் மட்டும் இருந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம் மற்றும் டிரைவர் ரெஜின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துறைரீதியான நடவடிக்கை

இந்த சம்பவம் நேற்று நாகர்கோவில் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. டாஸ்மாக் மேலாளர் மற்றும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்