வழக்குகளுக்கு சமரச தீர்வு காண விழிப்புணர்வு வாகன பிரசாரம்-மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சமரச தீர்வு
தர்மபுரி மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் சமரச தீர்வு காணக்கூடிய வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நேற்று தொடங்கியது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சையத் பர்க்கத்துல்லா, முதன்மை சார்பு நீதிபதி கோகுலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி சிவகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தர்ராஜன், கூடுதல் மகளிர் நீதிபதி மதுவர்ஷினி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கட்டணம் இன்றி தீர்வு
சமரச தீர்வு மையம் மூலம் வழக்குகளுக்கு கட்டணம் இன்றி சுமுகமாக தீர்வு காண முடியும். வழக்குகளை நேரடியாகவோ அல்லது வக்கீல்கள் மூலமாகவோ சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பலாம். சமரச தீர்வு மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது. இதற்கு மேல் முறையீடு கிடையாது. சமரச தீர்வு ஏற்படாவிட்டால் வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தலாம் என்று இந்த பிரசார வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதேபோல் சமரச தீர்வு மைய செயல்பாடு குறித்து ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) வரை நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட சமரச தீர்வு மைய பணியாளர்கள் செய்து உள்ளனர்.