மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

Update: 2023-01-03 16:56 GMT

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் என 410 பேர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பந்தையம், நீளம் தாண்டுதல், நின்ற இடத்தில் இருந்து நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டதட்டு எறிதல், காய், பழங்கள், பூக்கள் சேகரித்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

பரிசளிப்பு விழா

போட்டிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கமணி வரவேற்றார்.

இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், 56 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி, முடக்குவாத சக்கர நாற்காலி, கார்னர்சேர் போன்ற ரூ.8 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், தாட்கோ மேலாளர் ஏழுமலை உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்