மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் 757 மாணவர்கள் பங்கேற்பு
வேலூரில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் 757 மாணவர்கள் பங்கேற்றனர்.
வேலூரில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் 757 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஓவியப்போட்டி
இந்திய குழந்தைகள் நலச்சங்கம் சார்பில் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நேற்று வேலூர் மாநகராட்சி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி ஓவிய ேபாட்டியை தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுசிலா சிதம்பரம், பொருளாளர் சுந்தரவள்ளிகுபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வசுந்தராவரதராஜலு, உமாசந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 110 அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 757 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
4 குழுக்களாக மாணவ- மாணவிகள் பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டது. அதில் மாணவர்கள் ஒரு தலைப்பினை தேர்வு செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாற்றுத்திறன் குழந்தைகளும் போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநில அளவிலான போட்டி
இந்த போட்டியால் திருமண மண்டபம் முழுவதும் மாணவர்களால் நிரம்பி வழிந்தது. முதல்தளத்திலும், தரைத்தளத்திலும் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு, போட்டியில் பங்கேற்றனர்.
இதில் தேர்வு செய்யப்படும் 35 மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 34 மாணவ- மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.