அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
அண்ணா பிறந்தநாளையொட்டி, சேலத்தில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம்,
சைக்கிள் போட்டி
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. சேலம் இரும்பாலை சாலையில் ஆவின் பாலகம் அருகே நடந்த சைக்கிள் போட்டியை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வயது வாரியாக 10 கிலோ மீட்டர், 13 கிலோ மீட்டர் மற்றும் 17 கிலோ மீட்டர் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த சைக்கிள் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் 120 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியானது ஆவின் பாலகம் அருகே தொடங்கி கே.ஆர்.தோப்பூர், அணைமேடு (தாரமங்கலம் ரோடு) வழியாக மீண்டும் ஆவின் பாலகத்தை வந்தடைந்தது.
கலெக்டர் பரிசு வழங்கினார்
இதைத்தொடர்ந்து சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பல்வேறு பிரிவுகளாக நடந்த சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதாவது ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. 4 முதல் 10 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.250 வீதம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.