சேலத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
சேலம் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டியை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக சேலம் மாவட்ட அளவிலான செஸ் போட்டி சேலம் அழகாபுரம் புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் முதன்முறையாக நடக்கிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக வட்டார அளவிலான செஸ் போட்டி ஏற்கனவே கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.
சென்னைக்கு செல்கிறார்கள்
தற்போது மாவட்ட அளவில் செஸ் போட்டி நடத்தப்பட்டு உள்ளது. இதில் முதல் 2 இடங்களை பெறக்கூடிய 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள், மாநில அளவில் நடைபெறும் 5 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்கள். மேலும் முதல் 2 இடங்களை பெறும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் சென்னைக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் முருகன், புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சகாயராஜ், செயலாளர் அருளப்பன் உள்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.