வட்டார கல்வி அலுவலர் தேர்வை 1,098 பேர் எழுதினர்
திண்டுக்கல்லில் 4 மையங்களில் நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர் தேர்வை 1,098 பேர் எழுதினர்.
வட்டார கல்வி அலுவலர்
கல்வித்துறையில் காலியாக இருக்கும் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு, நேற்று மாநிலம் முழுவதும் தேர்வு நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1,308 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக திண்டுக்கல்லில் 4 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 280 பேரும், புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் 268 பேரும், அண்ணாமலையார் மேல்நிலைப்பள்ளியில் 380 பேரும், புனித லூர்தன்னை மேல்நிலைப்பள்ளியில் 380 பேரும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொரு மையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
1,098 பேர் எழுதினர்
மேலும் தேர்வர்களை தவிர யாரும் மையத்தின் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதோடு தேர்வர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 66 கண்காணிப்பாளர்கள், 8 தலைமை அலுவலர்கள், 16 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. இதற்கிடையே 4 மையங்களிலும் மொத்தம் 1,098 பேர் தேர்வு எழுதினர். ஆனால் 210 பேர் தேர்வு எழுத வரவில்லை.
முன்னதாக திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை, கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி, முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.