மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம்

வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-20 17:40 GMT

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 699 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 934 குடும்ப அட்டைகள் உள்ளது. முதல்கட்டமாக 418 கடைகளில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 955 குடும்ப அட்டைகளுக்கும், 2-ம் கட்டமாக 281 கடைகளில் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்து 987 குடும்ப அட்டைகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இந்த விண்ணப்பங்கள் சிறப்பு முகாம்களில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 660 சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட உள்ளது. தன்னார்வலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. முதல்கட்ட முகாம் வருகிற 24-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர் மாவட்டத்துக்கு தேவையான விண்ணப்பங்கள் சென்னையில் இருந்து வரப்பெற்றது. இந்த விண்ணப்பங்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முதல் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டனர். மேலும் அதனுடன் பதிவு செய்ய வரவேண்டிய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு டோக்கனையும் வழங்கினர்.

மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மாநகராட்சி வார்டு எண் 49, பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் இப்பணியையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் செந்தில்குமார் உடன் இருந்தார்.

காட்பாடி

காட்பாடி தாலுகாவில் 125 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 78 ரேஷன் கடையில் உள்ள குடும்ப தலைவிகளுக்கும், 2-வது கட்டமாக 47 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப தலைவிகளுக்கும் விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவம் வீடு வீடாக வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

இந்த விண்ணப்ப படிவம் வழங்கும் பணிக்கு காட்பாடி தாலுகாவில் மண்டல அலுவலர்கள் 20 பேர், கண்காணிப்பாளர்கள் 8 பேர், தன்னார்வலர்கள் 118 பேர் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதம்பட்டில் தன்னார்வலர்கள் விண்ணப்ப படிவம் வழங்கினர். இந்த பணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.

அப்போது தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர் நித்தியகுமார், மண்டல துணை தாசில்தார் சிவகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்