விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய விதை நெல் வினியோகம்

விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய விதை நெல் வினியோகம்

Update: 2023-01-06 18:45 GMT

வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய விதை நெல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

கருத்தரங்கம்

நாகை மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கம், உயர் தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளர்ச்சிக் கழகதலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராஜ் வரவேற்றார். பின்னர் கலெக்டர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கை 2022-23- அறிவிப்புகளின் படி வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளூர் பாரம்பரிய இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான மரபுசார் கண்காட்சி நடைபெறுகிறது.

பாரம்பரிய நெல் விதைகள் வினியோக திட்டம்

இந்த கண்காட்சியில் நம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும் உயர்தர உள்ளூர் பாரம்பரிய ரகங்களை சாகுபடிசெய்து வரும் சாகுபடிசெய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அனுபவமுள்ள முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு பாரம்பரிய உயர்தர உள்ளூர் பாரம்பரிய ரகங்கள் குறித்து தொழில்நுட்ப உரையாற்றுவார்கள்.

மேலும் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியநெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசால் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகதிட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகை மாவட்டத்தில் தூயமல்லி, கருப்பு கவுனி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது பூங்கார் பாரம்பரிய நெல் ரகம், அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

விதை நெல் கிலோ ரூ.12.50

இந்த பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 50 சதவீத மானியவிலையில் (1 கிலோ ரூ.12.50) வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.

'கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்" செயல்படுத்தப்படும் கிராமபஞ்சாயத்துகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அட்மா மாநில திட்ட குழுத்தலைவர் மகா.குமார், கீழ்வேளுர் அட்மா வட்டாரக்குழு தலைவர் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்