10 ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகம் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை

கடலூர் மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்படுகிறது.

Update: 2023-07-12 18:45 GMT

தமிழகத்தில் தற்போது தக்காளி விளைச்சல் இல்லாததால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் வெளிமாநிலங்களிலும் தற்போது விளைச்சல் குறைந்துள்ளதாலும், பருவமழை பெய்ததாலும் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.

கடலூரில் உள்ள மார்க்கெட்டுகளில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.120 வரை விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி கடலூர் உழவர் சந்தை, திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், கடலூர் முதுநகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.94 வரை விற்பனை செய்யப்பட்டது.

மக்களிடம் ஆர்வம் இல்லை

இதற்கிடையே குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு தக்காளி வழங்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள 10 கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் வரிசையில் நின்று தக்காளி பழங்களை வாங்கி சென்றனர். இருப்பினும் காய்கறி கடைகளில் விற்கப்படும், அதே விலைக்கு ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யப்படுவதால் அதனை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

வாங்கிய விலைக்கு விற்பனை

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்ட சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையின் கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் 85 கடைகள் உள்ளன. இதில் கடலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 5 ரேஷன் கடைகளிலும், விருத்தாசலத்தில் உள்ள 5 கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 200 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைகளுக்கும் தலா 20 கிலோ வீதம் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் அவை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ ரூ.90-க்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது லாப நோக்கம் இல்லாமல், வாங்கிய விலைக்கே குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்