நாகர்கோவில் கோர்ட்டில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

சமரச தினத்தையொட்டி நாகர்கோவில் கோர்ட்டில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-10 18:45 GMT

நாகர்கோவில்:

சமரச தினத்தையொட்டி நாகர்கோவில் கோர்ட்டில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஒவ்வொரு மாவட்டத்திலும் கோர்ட்டு வளாகங்களில் சமரச தீர்வு மையம், சமரச உதவி தீர்வு மையம் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் அதில் தொடர்புடையவர்கள் சமரசமாக செல்வதாக கோர்ட்டில் தெரிவிக்கப்படும் பட்சத்தில், அந்த வழக்குகள் சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்படும். குறிப்பாக விவாகரத்து வழக்குகள், நிலப்பிரச்சினை வழக்குகள், செக் மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் இந்த சமரச தீர்வு மையங்களில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதனால் வழக்குச் செலவு மற்றும் வீண் அலைச்சல், கால விரயம் மிச்சமாகிறது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சமரச தீர்வு மையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சமரச தினத்தையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் சமரச மையத்தின் நோக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

துண்டு பிரசுரம்

நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் சமரச தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய், தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி நம்பிராஜன், நீதிபதிகள் சொர்ண குமார், முருகன், அசன் முகமது, நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் அசோக்பத்மராஜ் மற்றும் நீதிபதிகளும் சமரச தீர்வு மையத்தில் வழக்குகளை தீர்வு செய்து வைப்பதற்கு பயிற்சி மேற்கொண்ட வக்கீல்களும் கலந்து கொண்டனர்.

சமரச தீர்வு மையத்தின் செயல்பாடு மற்றும் வழக்குகளின் துரித முடிவுகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் பொது மக்களுக்கு வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

இதுபோல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணி அளவில் கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து காந்தி மண்டபம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. இந்த சமரச தினத்தையொட்டி நாகர்கோவிலை போன்று பத்மநாபபுரம், குழித்துறை, பூதப்பாண்டி, இரணியல் ஆகிய கோர்ட்டுகளில் உள்ள சமரச உதவி தீர்வு மையங்களிலும் சமரச தினம் கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்