மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பபடிவம் வினியோகம்
குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகள் மூலம் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது. இந்த விண்ணப்பத்தை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகள் மூலம் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது. இந்த விண்ணப்பத்தை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர்.
விண்ணப்ப படிவங்கள் வினியோகம்
தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று தமிழக அரசால் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதன்படி குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பபதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடக்கிறது. முகாம் நடைபெறும் 4 நாட்களுக்கு முன்பாக விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக சென்று வீடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே குமரி மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வந்திருந்த நிலையில் முதல் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு உட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவ வினியோகம் நேற்று தொடங்கியது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள 215 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டது.
400 கடைகளில்...
ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று விண்ணப்ப படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் தினமும் தங்களது ரேஷன் கடைக்கு உட்பட்ட ரேஷன் கார்டு எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கு வீதம் விண்ணப்ப படிவங்களையும், டோக்கனையும் வழங்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேபோல் தோவாளை தாலுகாவில் 59 ரேஷன் கடைகளிலும், கல்குளம் தாலுகாவில் 126 ரேஷன் கடைகளிலும் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் நேற்று 400 ரேஷன் கடைகளில் மகளிர் ரூ.1000 உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவங்கள், டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. டோக்கனில் விண்ணப்பதாரர் பதிவு முகாமின்போது காலையில் செல்ல வேண்டுமா? பிற்பகலில் செல்ல வேண்டுமா? என்பதை தெரிவிக்கும் விதமாக வழங்கப்படும் டோக்கனில் முற்பகல், பிற்பகல் என்றும், சில கடைக்காரர்கள் நேரத்தை குறிப்பிட்டும் டோக்கன் வினியோகம் செய்கிறார்கள்.
என்னென்ன ஆவணங்கள்?
விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அந்த விண்ணப்ப படிவங்களை முகாம் நடைபெறும் அன்று வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அப்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். முகாம் நடைபெறும் பகுதியில் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவார்கள். எனவே பொதுமக்கள் முகாம் நடைபெறும் அன்று விண்ணப்ப படிவங்களை அதற்கான ஆவணங்களுடன் அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 2-வது கட்டமாக முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு அடுத்த கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான திட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.