கடந்த ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் - மதுரை மண்டல அதிகாரி பி.வசந்தன் தகவல்

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரம் பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மண்டல அதிகாரி பி.வசந்தன் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

Update: 2023-01-25 20:43 GMT


மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரம் பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மண்டல அதிகாரி பி.வசந்தன் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

தென்மாவட்டங்கள்

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே, மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பணியிடம் கடந்த 2 வருடங்களாக காலியாக இருந்தது. இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்த பி.வசந்தன், மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழகத்தை சேர்ந்த இவர் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 2009-ம் ஆண்டு இந்திய வனத்துறை பணியில் சேர்ந்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

14 நாட்களுக்குள்

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ள விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மதுரை மற்றும் நெல்லையில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன், 8 இடங்களில் தபால்நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 1,295 பேர் சாதாரண மற்றும் தட்கல் பாஸ்போர்ட், போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கின்றனர்.

இதில் தட்கல் பாஸ்போர்ட் கேட்டு சுமார் 80 பேரும், போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் கேட்டு சுமார் 230 பேரும் விண்ணப்பிக்கின்றனர். கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் பேர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்கின்றனர். அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு மதுரை மண்டல அலுவலத்தில் 1,51,905 பாஸ்போர்ட்டுகளும், 2022-ம் ஆண்டு 2,27,811 பாஸ்போர்ட்டுகளும் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் கிடைத்த 14 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற முடியும்.

காலதாமதம்

போலீஸ் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க 21 நாட்கள் அவகாசம் உள்ளது. இதில் மதுரை மாநகர போலீசில் இருந்து விசாரணை அறிக்கை கிடைப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. அதனை தவிர்க்க போலீஸ் கமிஷனருடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. தட்கல் பாஸ்போர்ட்டை பொறுத்தமட்டில் முறையான ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் வழங்கப்படும்.

முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காதவர்கள், போலீஸ் விசாரணை அறிக்கை சான்றில் தடை இருப்பது ஆகிய காரணங்களுக்காக இதுவரை 6 ஆயிரம் பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் குறைதீர்ப்பு பிரிவுக்கு தகுதியற்ற விண்ணப்பங்களாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, உதவி பாஸ்போர்ட் அலுவலர் அஜய்கோஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்