தேவூர், எடப்பாடி பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு
தேவூர், எடப்பாடி பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
சேலம்,
தேவூர்
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், ஆலச்சம்பாளையம், சங்ககிரி, தேவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பின்னர் 65 சிறிய, பெரிய விநாயகர் சிலைகளை பல்வேறு வாகனங்களில் மேளதாளத்துடன் ஏராளமானவர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். அந்த சிலைகளை போலீசார் முன்னிலையில் தேவூர் பகுதியில் கிழக்கு கரை கால்வாயில் பூஜை செய்து கரைத்தனர்.
எடப்பாடி
எடப்பாடி பகுதியில் ஏராளமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்ததால், பூலாம்பட்டி அருகில் உள்ள பில்லுக்குறிச்சி மற்றும் ஓணம்பாறை பகுதியில் காவிரி கால்வாயில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி நேற்று எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 110 சிலைகள் காவிரி கால்வாயில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.