தன்மானம் இல்லாத கூட்டம் தி.மு.க. அரசை விமர்சிக்கிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

கோவை ஈச்சனாரியில் தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

Update: 2022-08-24 08:47 GMT

கோவை,

கோவை ஈச்சனாரியில் தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ரூ.272 கோடியில் முடிவுற்ற 229 பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர்.

இதையடுத்து விழாவில் பேசிய முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 மாதங்களில் கோவை மாவட்டத்துக்கு 5 முறையாக வந்துள்ளேன். இந்த மாவட்டம் மற்றும் மக்கள் மீது வைத்திருக்கும் அடையாளம் தான் இது. அரசு விழா என்பதை விட கோவை மாநாடு என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் எதிர்கால தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை உங்கள் முகத்தில் பார்க்கும் மகிழ்ச்சியில் மூலம் அறிந்து கொள்கிறேன். இன்றைய நாள் அனைத்து துறை வாயிலாக 588 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 410பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதுவரை நடந்த அரசு விழாக்களில் அதிக பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்படுவது கோவையில் தான். இது மிகப்பெரிய சாதனை. என்ன செய்தோம் என்று சிலர் கேட்டுள்ளனர். அவர்களுக்கு நான் நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாக சொல்கிறேன் இது தான் சாதனை. கடந்த ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் கோவையில் 1, 234 கோடிக்கு அதிகமான ரூபாயில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 185 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் மக்களுக்காக இந்த அரசு இருக்கிறது. இந்த பல சாதனைகளை ஆற்றி கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக அறியலாம். சிலருக்கு உதவி செய்து விட்டு கணக்கு காட்டுபவர்கள் நாங்கள் அல்ல. கணக்கில்லா உதவிகளை கணக்கிடமுடியாத செய்யக்கூடிய அரசு தான் தி.மு.க அரசு என்பதை நான்கம்பீரமாக சொல்கிறேன்.

மிக எழுச்சியோடு, கம்பீரமாக நடக்ககூடிய நிகழ்ச்சியாக மேலும் மும்மடங்கு பிரமாண்டமாக ஆக்க கூடிய வகையில் 3 புதிய முன்னெடுப்புகளை தொடங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். ரூ.161 கோடி ரூபாயில் மதிப்பில் கல்வி கடன் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 60 கல்லூரி மற்றும் 200 அரசு பள்ளிகளுடன் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன.

கோவை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்ககூடிய மாபெரும் திட்டம் தான் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டம். விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ.1,810 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் 85 பயனாளிளுக்கு ரூ.18 கோடியே 47 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் 679 பேருக்கு 31 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 லட்சத்து 57 பேர் பயன் அடைந்துள்ளனர். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் 19 ஆயிரத்து 590 பேர் பயன் அடைந்துள்ளனர். கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்குட்பட்ட நகை கடன் தள்ளுபடியில் 47,567 பயனாளிகளுக்கு ரூ.199 கோடியே 53 லட்சம் தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

13 கோடியே 92 லட்சம் மதிப்பில் 294 தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 95 லட்சம் ரூபாயில் 4 ஆயிரத்து 764 கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறைச்சாலையை இடமாற்றி ரூ.200 கோடி செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. குடிநீர் தேவையை போக்க சிறுவாணி அணையில் தண்ணீர் திறக்க கேரள முதல்வரிடம் தொலைபேசியில் பேசினேன். அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. கழகம் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. தமிழ்மக்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகிறோம். இதில் எந்தநாளும் மாறுபாடு இருக்காது என்பதை உறுதியோடு தெரிவிக்கிறேன்.

பலவேறு மாநில அரசும் தமிழ்நாடு அரசின் முற்போக்கான திட்டங்களை உன்னிப்பாக கவனித்து, அதனை தங்கள் மாநிலத்திலும் பின்பற்றுகின்றனர். இதனை இங்கு இருக்கும் சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. பொத்தாம் பொதுவாக எந்த வாக்குறுதியும் தி.மு.க. நிறைவேற்றவில்லை என்கின்றனர். அவர்களை பார்த்து நான் கேட்பது மக்களோடு மக்களாக வந்து அவர்களிடத்தில் கேட்க வேண்டும். ஏதோ பேட்டி கொடுக்க மட்டும் வீட்டை விட்டு வெளியில் வந்து, அதன்பின்னர் உள்ளே செல்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்கள் அடையும் நன்மைகளை உங்களால் அறியமுடியாது. இன மானம், தன்மானம் இரண்டையும் பற்றி கவலைப்படாதவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெரியார் சொன்னார். அந்த வகையில் தான் தன்மானம் இல்லாத இனமானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம் தான் தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கிறது. இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

திமுக ஆட்சி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒளிதரும் ஆட்சி. தி.மு.க. ஆட்சி அடக்கப்பட்டவர்களை அரவணைத்து நன்மை செய்யும் ஆட்சி. பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியின மக்களின நல்வாழ்வுக்காக அமைந்த அரசு. சிறுபான்மை, பெரும்பான்மை சமூகத்திற்கான ஒற்றுமை எந்தகாலத்திலும் நமது மாநிலத்தில் சிதைந்துவிடக்கூடாது என்று நினைக்கும் சகோதரத்துவ அரசு தான் தி.மு.க. அனைவருக்குமான அரசாக தி.மு.க செயல்படுகிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாராமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் 1½ ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி, தமிழ்நாட்டை வளம் கொண்ட மாநிலமாக மாற்றியுள்ளோம்.

மீதமுள்ள ஆட்சிக்காலத்தில் உலகத்திலேயே வளமான சிறப்பான முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். இந்த கோட்பாடு, சிந்தனை நிறைவேறக்கூடாது என சிலர் என்னை விமர்சனம் செய்கின்றனர். விமர்சனத்தில், விமர்சனங்களால் வளர்ந்தவன் நான். எதிர்ப்பை அடக்குமுறையை மீறி வளர்ந்தவன். என்னை எதிர்த்தால் தான் உற்சாகமாக செயல்படுவேன். ஆனால் மக்களுக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன். சொந்தக் கட்சியின் அதிகார போட்டியையும், தங்களது கையாளகாத தானத்தையும் மறைக்க தி.மு.க.வை விமர்சனம் செய்கின்றனர். தி.மு.க.வை விமர்சனம் செய்யும் தகுதி, யோக்கியதை யாருக்கும் கிடையாது. இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்