திருக்கோவிலூர் அருகேகஞ்சா போதையில் தகராறு; 2 வாலிபர்கள் கைது
திருக்கோவிலூர் அருகே கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த செங்கனான்கொல்லை கிராம பஸ் நிறுத்தம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்ததுடன், அவ்வழியாக வரும் பஸ் கண்ணாடிகளை உடைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுபற்றி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தகராறில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் மோகன்ராஜ் (வயது 31) என்பதும், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மோகன்ராஜை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜி.அரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் எதிரே உள்ள சாலையில் நின்று பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சோழபாண்டியபுரத்தை சேர்ந்த கணபதி மகன் சூர்யா (23) என்பவரையும் திருக்கோவிலூர் போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.