திருவாலங்காடு ஒன்றியத்தில் 3 ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரம் பறிப்பு - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை

திருவாலங்காடு ஒன்றியத்தில் பெரியகளக்காட்டூர், லட்சுமாபுரம், தாழவேடு ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் நிலை கையொப்பமிடம் அதிகாரத்தை தற்காலிகமாக ரத்துசெய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-30 09:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் தாழவேடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கும் நிர்மலா, தனது பதவியை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தெரிகிறது.

அதேபோல் பெரியகளக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவரான மணிமேகலை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ஊராட்சி நிர்வாகத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் லட்சுமாபுரம் ஊராட்சி தலைவரான கங்கா, வயது முதிர்வு காரணமாக கையொப்பமிட முடியாமல் உள்ளதால் கை நாட்டு வைக்க கோரிக்கை வைத்துள்ளார். எனவே இந்த 3 ஊராட்சி மன்ற தலைவர்களின் முதல்நிலை கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

மேற்கண்ட 3 ஊராட்சிகளிலும் அரசு விதிமுறைகள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பின்பற்றப்படாமல் நிதி கையாடல், ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரத்தின் படி, பெரியகளக்காட்டூர், லட்சுமாபுரம், தாழவேடு ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் நிலை கையொப்பமிடும் அதிகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து உள்ளார்.

இதனால் ஊராட்சி நிர்வாகம் தடைபடாமல், சீராக நடக்க அவசியம், அவசரம் கருதி, திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கிராம ஊராட்சி) முதல் நிலை கையொப்பமிடும் அலுவலராக அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்