தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2,170 வழக்குகள் முடித்து வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2170 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-05-13 16:08 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2170 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்

மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் இன்று சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சிக்கு மாவட்ட அமர்வு முதன்மை நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கி கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்து பேசினார்.

தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் கோட்டீஸ்வரன் செய்திருந்தார்.

இதில் மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கியில் விவசாய கடன், கல்வி கடன் என பல்வேறு பிரிவுகளை சார்ந்த வழக்குகள் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. பின்னர் வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

இதில் மகிளா நீதிபதி சுஜாதா, சார்பு நீதிபதி பழனிவேல், கூடுதல் சார்பு நீதிபதி சாதிக்பாஷா, கூடுதல் உரிமையியல் நீதிபதி சுபாஷினி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர் என பலர் கலந்து கொண்டனர்.

2170 வழக்குகள் முடித்து வைப்பு

மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 342 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 2170 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.7 கோடியே 73 லட்சத்து 96 ஆயிரத்து 914 இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்