ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம்
ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்தார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்தார்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் (வேளாண்மை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பேசியதாவது:-
ஏரி ஆக்கிரமிப்பு
100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை வாரத்தில் 2 நாட்கள் விவசாய பணிகளுக்கு அனுப்ப வேண்டும். விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வங்கி அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்படும் தக்காளி, வெண்டை, கத்திரி விதைகள் தரமாகவும், விரைவாகவும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒடுகத்தூர் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டெருமைகள் விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒடுகத்தூர் சேர்ப்பாடி பகுதியில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்து வருகிறார்கள். அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தத்தை அடுத்த கள்ளூரில் பாழடைந்த நிலையில் தொடக்கப்பள்ளி உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் தெருவை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடனை தள்ளுபடி செய்ய பரிந்துரை
பயிர்க்கடன், டிராக்டர் கடன் உள்ளிட்டவை கூட்டுறவு அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. கூட்டுறவு மூலம் பெறப்படும் வங்கி கடன்களை அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. டிராக்டர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
காட்பாடி பகுதியில் நீர்நிலைகளில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அதிகளவு மண் அள்ளுகிறார்கள். அதனை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், நீர்நிலை உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்.
எனவே அதனை நினைவில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காட்பாடி பகுதியில் நீர்நிலைகளில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்கப்படும். கூட்டுறவு பதிவாளர் வெளியிட்ட நெறிமுறைகளை பின்பற்றி உரம் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.