கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி

கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-06-09 18:38 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ.மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ''காமராஜரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் மகன் நடராஜமூர்த்தி சங்கிலியால் பிணைக்கப்பட்டு நகர முடியாத நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் உள்ளார். இந்த ஆஸ்பத்திரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் முழுமையாக குணமடைந்த பின்னரும், அழைத்து செல்ல ஆளில்லாமல் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாநில மனநல ஆணையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் மனு கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில மனநல ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர், ''சமூக வலைதளங்களில் வந்த தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மைத்தன்மையை ஆராயாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், முறையாக ஆதாரங்களை திரட்டி புதிதாக வழக்கு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதியளிக்கிறோம்'' என்று உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்