ஆதிதிராவிடர்களுக்காக கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஆதி திராவிடர்களுக்காக கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஆதி திராவிடர்களுக்காக கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நிலத்தை கேட்டு மனு
மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த கருப்பாயி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் கிராமத்தில் எனக்கு சொந்தமான தரிசு நிலம் இருந்தது. இந்த நிலத்தை மீனாட்சிபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர்களின் வீட்டுமனைக்காக தமிழ்நாடு அரிஜன் நலத்திட்டத்திற்கான நில ஆர்ஜித சட்டப்படி கடந்த 1986-ம் ஆண்டில் ஆர்ஜிதம் செய்தனர். பல ஆண்டுகள் ஆகியும் அந்த நிலங்களை உரிய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் மீனாட்சிபுரம் ஆதிதிராவிடர் மக்களுக்கு வேறு பகுதியில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டு உள்ளது. எனது நிலம் தற்போது வரை காலி நிலமாகவே இருந்து வருகிறது. எனவே எனது நிலத்தை மீண்டும் என்னிடமே ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தள்ளுபடி
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுதாரர் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அரிஜன் நலத்திட்ட நில எடுப்பு சட்டப்படி கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது. எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.